பக்கம் எண் :

16தமிழ்ஒளி கவிதைகள்

மக்கள் படுந்துயரும்
        நன்மனைவி விம்முதலும்
துக்கக் கடலாகிச்
        சூழ்ந்ததடா கப்பலிலே!
மூட்டை அவன்உடலை
        முட்டி நெருக்கிற்று!
வீட்டை ஓரு தடவை
        பார்க்க எண்ணும் வேளையிலே

மயக்கம் வரக்கண்டான்
        மாமலைபோல் மூட்டை
உயரஅவன் கால்கள்
        ஒட்டில் சறுக்கினவே!
கப்பலின்மேல் தட்டினின்றும்
        கண்சொருகக் கீழ்நோக்கித்
தொப்பென்று வீழ்ந்தான்
        சுடுகாட்டு சாலிருளில்!

கப்பல் அடித்தளத்தில்
        காரிரும்பி யந்திரத்தில்
குப்புற வீழ்ந்து தலை
        கூறாய்ப் பிளந்ததடா!
வானம் இருண்டதவன்
        வாழ்விருட்டைக் கண்டவுடன்
கூனல் உலகே
        முதலாளி கொள்கைக்கு

இன்னும் இடமுண்டோ?
        என்றலைகள் சீறினவே!
என்ன பயன்? செத்துவிட்டான்
        ஏழை; அவன் குடும்பம்
மின்னலிடி யோடு
        வந்த மழை வெள்ளந்
தன்னைச் சரண் புகுந்ததாம்.

‘அமுதசுரபி’ - 1948