மழைக்காலம்
மலைபோலவும் நிழல்போலவும்
வான் எங்கனும் மேகம்
அலைவுற்றிட இருள்மூடிட
அடி மேல் அடி வைத்து
தலை நீட்டுது மழைக்காலமும்
தரை நங்கையின் வாழ்வில்!
கலையூறிடும் திருநாள் இது
களிதுள்ளுது நெஞ்சில்!
போர் வந்தது போலும் இடி
போய்க் கொட்டுது முரசம்!
கார்யானையின் மீதிற்படும்
கடும் அம்புகள் மின்னல்!
நீர் ஊற்றிடும் வான்கைகளோ
நெடு மாமுகிற் கூட்டம்?
பார் மீதுவிண் மலைபாய்ச்சிடும்
பனியூற்றெனும் மழைகாண்!
பகலோடிருள் ஒன்றாகிடும்
பகலோன் ஒளிச் சுடர்கள்!
புகவும் இனி விடவோ? எனப்
புகை மாமுகில் சீறும்!
அகம் ஊறிடும் மகிழ்வால், குளம்
அதிரும்படி தவளை
மிக நீண்டிடும் இருள்போல், ஒலி
மிக நீட்டியே கத்தும்!
சுவர்க் கோழிகள் இடுமோர் ஒலி
தொலையாப் பெரும்ஓலம்!
சுவர் ஓதமும் தரையீரமும்
தொல்லைக்கிட மாகக்
கவலைப்படும் எளியோர் குடில்
கண்ணீர்விடும் சோகம்!
அவலச்சுவை மிகும் சூழ்நிலை
அமையும் அது நேரம்!
|