நீராடிய மனிதன் என
நெடுமாமரம் நிற்கும்
வேரோடிலை யாவும், குளிர்
விஷம்போலவே ஏறும்
நாரால்முடை சிறுகூட்டினுள்
நல்லன்புடன் நாளும்
பாராட்டிடும் சிறுகுஞ்சுடன்
பறவைமனம் வாடும்!
தெரு மூலையில், வறியர் எனத்
திண்டாடிடும் சொரிநாய்
ஒரு நாள் ஒரு யுகமாகவே
உயிர் வாழ்ந்திடும் ஏழை
பெரு மாமழை வரும் வேளையில்
பேராழமும் விரியும்
உருவாகிய கடல் வீழ்வுறும்
உணர்வுற்றிடு வானே!
உழவன்விழி ஒளிபூத்திடும்
உயிர்போன்றிடு பயிரும்!
கழனிக்கரை யாவும்மனக்
கண் முன்வரும்; ஆனால்
ஒழுகும்சிறு குடிலில்அவன்
உடல்வாடிடும் பசியால்!
உழுவோன்நிலை இவ்வாறென
உறுமும் இடி ஓடி!
நகரத்தினில் பெரும்ஆலையில்
நண்ணும் பணி புரிவோர்
அகம் ஏங்கிட மழையில்நனைந்
ததிகாலையில் ஓடி
சுகமற்றிடு தம்வாழ் வெனுந்
துயர் ஆடையை நெய்வார்
சகத்திற் குடை தருவோர்உடல்
தன் பொக்கிஷம் கந்தல்!
|