|
(வேறு)
மின்னலைத் தன்னுட் போற்றும்
மேகமாய் மாயை யென்ற
அன்னைதன் மைந்தன் றன்னை
ஆலிலை வயிற்றுட் கொண்டு
கன்னலைக் காக்கு மாறு
கண்விழித் திருக்க லானாள்!
இன்னலை மறந்த வையம்
இனிமையில் மூழ்கிற் றாமால்!
‘அவள்முகந் திங்க ளேயோ!’
‘அமுதமோ மேனி!’ ஞாலத்
திவள்ஒரு தெய்வ மேயோ!’
‘தேவர்தம் கன்னி யோ’என்
றவரவர் உரைத்த லோடும்
அரசரும் போற்ற வாய்மை
தவத்தினில் இருந்த மாயை
தன்சுடர் ஒளிர்ந்த தாமால்!
கண்களிற் கருணை வெள்ளம்!
காட்சியிற் புதிய இன்பம்!
பெண்களில் மாயை யென்ற
பெண்ணுக்கு ஞான யோகம்!
எண்களில் அடைப டாமல்
இயற்றிய தான மெல்லாம்
பண்களிற் பரந்து நிற்கும்
பாடலாற் புகழ லாகும்!
|