பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 116

குடிகொண்ட கோயில் :

(வேறு)

வருத்தம் ஒன்றும்
       இன்றி வயாவினால்
       வாழ்ந்த மாயை
       தன்கருப் பையிடை
திருத்தம் எய்தி
       இருந்த சிகாமணி
       தேர்ந்து கொண்ட
       கோயிற் சிறந்ததே!

அரன்றன் கோயில்
       அதனின் உயர்ந்ததாம்!
       அரியின் கோயில்
       அதனின் சிறந்ததாம்!
முரன்ற பாடல்
       அமரர் எழுப்பிட
       முரசம் விண்ணில்
       முழங்கி அதிர்ந்ததே!

மாயையின் வேட்கை :

பத்து மாதம்
       உதரத்தில் இப்பிபோல்
       முத்து வைத்து
       முயன்ற மனோகரி,
தந்தை விந்தை
       அரண்மனை ஏகவே
       தன்னு ளத்து
       விருப்பை உரைத்தனள்!

‘சிந்தை போன்று
       செய்க’என் றோதியே
       செல்வ மன்னர்
       சிறப்புகள் செய்தனர்!