ஒலிபுகவும் ஒளிபுகவும்
வனத்தின் நீழல்
உயிர்புகுந்த உடலாக
மாற்றங் கொள்ளக்
கலி புகுந்த காலத்தை
வீழ்த்து தற்குக்
கடற்புகுந்த தெனப்புகுந்தார்
மாந்தர் ஆங்கே!
அணிமணிகள் ஒளிசெய்ய
மகளிர் கூட்டம்
அன்னங்கள் எனச்செல்ல
அவரிடைப் பெண்
மணிஎன்னும் மாயைமுழு
மதியை ஒத்தாள்!
மரக்கொம்பர் மேகங்கள்
ஒத்த மாதோ!
(வேறு)
மலர்களுந் தொகைகளும்
மங்கையர் நகைகளும்
மதிப்பிடுவன தம்மை!
இலர்களும் பணமுடை
யவர்களும் எனச்சரு
கிலைகளும் இருந்தனவே!
உடைகளும் தளிர்களும்
உவமையில் ஒத்திட
உரிமரப் பட்டையவை
அடைந்திடும் பிறவியை
அறுப்பவர் மனமென
அவ்வனத் திருந்தனவே!
|