பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 124

மாயைதன் மலரடியை
       வணங்கி னாற்போல்
       மரக்கிளைகள் தாழ்வுற்றுத்
       தாழ்ந்து நிற்கத்
தாயனாள் அக்கிளையில்
       ஒன்றைப் பற்றித்
       தராதலத்தின் பற்றறுக்குந்
       தருணம் பார்த்தாள்!

தாயுடலுள் வீற்றிருந்த
       சேயும் ஆங்கே,
       தன்னொளியை வீசஇது
       தருணம் என்றே,
நோயுடலின் விலாப்புறத்தை
       நோக்க லானார்!
       நொடியிலவர் ஒளிஎங்கும்
       நுழைந்த தம்மா!

சற்றேனுந் துயரின்றி
       விலாப் புறத்தால்,
       சங்கம்போல், சிங்கம்போல்,
       தருமம் போலே,
பற்றேதும் இன்றிஒரு
       பாலன் தோன்றப்
       “பார்இவனே புத்தன்” எனப்
       பாடும் காடு!