பக்கம் எண் :

127தமிழ்ஒளி கவிதைகள்

மன்னர்தம் வருகைதனை
       அறிந்த மாயை
       மகிழ்வோடு வரவேற்றாள்!
       மலர்க் குழந்தை

தன்னைஒரு வெண்பட்டுத்
       துணியிற் சுற்றித்
       தந்தையிடம் தந்தார்கள்
       சரணம் என்றே!

மதியமைச்சர் மறையோர்கள்
       வாழ்த்துக் கூற,
       மைந்தன்ஒரு தங்கம்போற்
       பொலிந்து தோன்றக்
“கதிபெற்றார்! மன்னரையே
       காணப் பெற்றார்!
       கண்பெற்றார் சாக்கியர்கள்”!
       என்றார் மக்கள்!

தலைநகரம் செல்கஎன
       மன்னர் சாற்றத்
       தடங்கடலின் பெயர்ச்சி எனப்
       படைகள் செல்லக்
கலைநகரம் கைகாட்டி
       அழைக்க அந்தக்
       கண்மணியை விண்மணியைக்
       கொண்டு சென்றார்!