அசிதமுனி வருகை
முதல் நாள் :
புத்தர்எனும் பெருமகனார் பிறந்த செய்தி
புண்ணியனாம் அசிதமுனி அறிந்தா னாகிச்
சித்தனைநான் கண்டுமனந் தேர்வேன் என்றே
செழுமைநிறை அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்!
அத்தருணம் மன்னரவர் வணங்கா நிற்ப,
ஆசனத்தில் அசிதமுனி அமர்ந்து நோக்க
மெய்த்தவத்துக் குழந்தைதனை மாயை யேந்தி
“மேலோனின் பாதத்தை வணங்காய்” என்றாள்!
அசிதமுனி முகத்தருகே குழந்தையின் கால்
அழகாக நீண்டுவர அறிந்த ஞானி
“பசியுற்று நான்வந்தேன் அரண்ம னைக்குப்
பாலமுதம் அருந்தினேன்!” என்று சொன்னார்!
கசிகின்ற அன்பினராய் மன்னர் ஆங்கே,
கைகூப்பி, “யானறிய உரைப்பீர்” என்றார்!
“நிசியகற்றும் நிலவென்று பிறந்த ஞானி
நின்மைந்தன்! யாம்அவனின் அடியார்!” என்றார்!
“கடலிடையே தவிப்பார்க்கு கரையைப் போன்றான்,
காமத்தால் வெந்தவர்க்குப் பொய்கை யாவான்!
கிடந்துழன்றே ஏக்கமுறும் மாந்தர்க் கெல்லாம்
கிட்டரிய புகலிடமும் இவனே யாவான்!
தொடர்கின்ற அறியாமை, பாவம் நீங்கத்
துணைசெய்ய இவனன்றி யாரு மில்லை!
படர்கின்ற நிழல் ஆவான்! மலரும்ஆவான்!
பாருலகில் இவனன்றோ தெய்வம்” என்றார்!
|