பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 130

முனியுரைத்த உரையெல்லாம் கேட்ட மன்னர்
முகம்வியர்த்து, “நம்மைந்தன் துறவி யாவான்!
கனிபழுத்தும் பயனில்லை!” என்று கூறிக்
கண்களிலே நீர்மல்க இறைஞ்சி நின்றார்!
“இனியுலகில் அமுதமழை பொழியா நிற்கும்
ஏன்கவலை?” எனமுனிவர் எழுந்து சென்றார்!
தனியிடத்தே மாயையுடன் மன்னர் சென்று
தம்மைந்தன் நிலையெண்ணித் தவிக்க லானார்!

சோதிடரை அழைத்தல் :

(வேறு)

சோதிடர் வந்து நிறைந்தனர் - அவர்
சொற்களில் விற்களை ஒத்தவர்!
வாதிடும் வித்தையை ஓர்ந்தவர் - அவர்
வானை அளந்துகை தேர்ந்தவர்!
வேதியர் சூழ்ந்து வணங்கவும் - மன்னர்
வேறு நினைவெதும் இன்றியே
“ஓதுவீர் என்மகன் உண்மையை?” - என்
றுள்ளந் தழல்படக் கூறினார்!

வேதியர் உண்மை விளம்பினர் - அவர்
விண்ணவர் போன்று கிளம்பினர்!
ஆதியும் அந்தமும் நோக்கினர் - தம்
ஆய்வுரை யாற்பலன் தேக்கினர்!
“ஓதி வளர்ந்திடும் நாளிலே - இவன்
உள்ளம் குடும்பத்தில் ஒன்றுமேல்
மாதிரம் யாவும் வணங்கிட - இவன்
மன்னர் மன்னன்என மாறுவான்?