பக்கம் எண் :

131தமிழ்ஒளி கவிதைகள்

உள்ளந் துறவினில் ஒன்றுமேல் - இவன்
ஒற்றைத் திகிரி யுருட்டுவான்!
வெள்ளம் எனத்திசை மோதுவான் - புது
வேதம் இயற்றியே ஓதுவான்!
தெள்ளத் தெளிந்துரை செய்கிறோம் - இவன்
சிந்தையை நம்பக்கம் மாற்றினால்,
ஒள்ளிய இல்லறம் சேர்க்கலாம்” - என்
றோதி முடித்தனர் சோதிடர்!

(வேறு)

இல்லறத்தில் இவனைநாம் சேர்க்க லாகும்
என்றுரைத்த உரையாலே மனந் துணிந்து,
தொல்லறத்தைத் தொழுதவராய் மன்னர் சென்றனர்!
தூயையாம் மாயையவள் தொழுது நோக்கிப்
பல்லறமும் போற்றஇவன் வாழ்வான் என்று
பற்பலரும் கூறுவதால் துறவென் கின்ற
நல்லறமே நாடுவான் என்று சொல்லி
நாக்குழற மூர்ச்சையுற்றாள் நலிவுகொண்டே!

மாயைதன் நிலைமைதனை மாற்று தற்கு
மன்னரவர் பற்பலவும் செய்ய லானார்!
தாயவளைப் பணிப்பெண்கள் தேற்ற லானார்!
தளிருடலிற் சூடேற மாயை தேவி,
தூயஎன் மைந்தனையே காக்க வேண்டும்
தொலைதூரம் நான்பயணம் செல்ல வேண்டும்!
தீயருகில் அவன்உள்ளான் என்று கூறித்
திடுமென்று மூர்ச்சையுற்றாள் செயல் இழந்தே!