1. காலத்தை
வென்ற கவிஞன்
-வெண்பா
செந்தமிழின்
தீம்பாகோ? தேனோ? தெறிகனலோ?
சுந்தரப் பூவினது தூய்மணமோ? - எந்த மொழி
தந்திதனை ஏற்றிப் புகழ்வேன்? தமிழ்ஒளியும்
தந்தகவிப் பெருக்கைத் தான்.
மான உணர்வுடையான்; மாத்தமிழைக் காதலித்தான்
தானெவர்க்கும் அஞ்சித் தலைபணியான் - கோனெனவே
பாப்பாடி வீற்றிருந்தான், பண்ணெழுப்பும் கோகிலமாய்க்
கூப்பாடு செய்தான் குழைந்து.
விண்ணின் சுடர்முத்தாய் வேய்ங்குழலின் பண்ணமுதாய்
எண்ணும் பொதிகை இளங்காற்றாய் - மண்ணுலகில்
என்றும் நிலைக்கும் இறவா அவன்கவிதை
சென்றொழியும் காலத்தை வென்று.
புத்தம் புதுச்சந்தம், பொன்னான கற்பனைகள்
நித்தம் மணம்கமழும் நேர்உவமை - உத்தமமாய்
தந்தான் தமிழுக்கு, தாய்மொழிப் பூங்காவில்
சந்ததமும் நின்றொளிர்வான் சார்ந்து.
ஏழை நெடுந்துயரை ஏய்ப்பவரின் சூழ்ச்சியினை
ஊழல் சமுதாய ஊனத்தைப் - பாழாக்கும்
கீழ்மேல் பிரிவினையைக் கேடளிக்கும் பேதத்தை
வீழ்த்தக் கவிசெய்தான் வெந்து,
தமிழுக்குத் தாழ்வென்றால் தன்னெஞ்சு சாம்பிக்
குமுறித் துடித்துக் கொதிப்பான் - நிமிர்ந்த
நடையுடையான், நேர்கொண்ட நெஞ்சுடையான் துன்பப்
படைஎதிர்ப்பான், வாழ்வறிந்தோம் பார்த்து,
பூதஉடல் மாயும்; புகழுடம்பு மாய்ந்திடுமோ?
ஏதம் இதனால் எதுவாகும்? - கோதிலாத்
தங்கக் கவியில் தமிழ்ஒளியும் வீற்றிருப்பான்
மங்கா ஒளியை வளர்த்து.
-கவிஞர். தே.ப.பெருமாள்
|