பக்கம் எண் :

139தமிழ்ஒளி கவிதைகள்

2. கமழும் பூக்கள்

தமிழன்னை கொலுவிருக்கும் திருக்கோ யில்தன்
சன்னதியில் உன்னதம்சேர் மலர்கள் கோடி
இமயம்போல் குவித்திருந்தார்! அவைக ளெல்லாம்
ஈராயிரம் ஆண்டு தொடங்கி நேற்று
நமையெல்லாம் மனிதர்களாய் மாற்றிச் சென்ற
நற்கவிஞன் பாரதி - பா வேந்தன் ஈறாய்ச்
சமயத்துக் கேற்றபடி யாத்துத் தந்த
சமுதாயப் படப்பிடிப்புப் கவிதைக் கோவை!

அதற்குப்பின் தமிழகத்தில் கவிஞர் பல்லோர்
அடுத்தடுத்துத் தோன்றியிங்கே பக்திப் பண்கள்
புதுக்கவிதை யெனும்பெயரில் உரைந டைபோல்
புரியாமல் எழுதியது மட்டு மின்றி
எதற்கிந்த எதுகைமோனைக் கட்டுப் பாடு!
இலக்கணமே தேவையில்லை என்றும் சொன்னார்!
இதற்கிடையே தமிழ்ஒளியென் றோர்இ ளைஞன்
எழுச்சிமிகுங் கவிஞனென முகிழ்த்தெ ழுந்தான்?
‘முன்னணி’யென் னும்பெயரைத் தாங்கி நின்ற
முற்போக்கு வாரஇதழ் தன்னை முன்பு
சென்னையிலே தொடங்கிநண்பன் குயில னோடு
சேர்ந்துபணி புரிந்திடுங்கால் பொருளா தார
இன்னலெல்லாம் இன்பமென ஏற்றுக் கொண்டு
இரவுபகல் பாராது ஒய்வே யின்றி
தன்னலங்கள் மறந்துதமிழ்ச் சேவை செய்த
‘தமிழ்ஒளி’யின் உழைப்பைஉள்ளம் மறந்தா போகும்?

சமுதாயச் சீர்கேட்டைச் சாடு தற்கும்
சரித்திரத்தின் பொற்காலம் மீள்வ தற்கும்
சமயமதப் போராட்டம் ஓய்வ தற்கும்
சாதிவெறிப் பேயாட்டம் மாய்வ தற்கும்
தமிழ் இனத்தின் பண்பாடு ஓங்கு தற்கும்
தலையெடுக்கும் களையனைத்தும் நீங்கு தற்கும்
சமதரும கொள்கைநிலை பெறுவ தற்கும்
தளராது கவிக்கணையால் சமர்தொ டுத்தான்!