பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 140

சிறுவனெனக் காண்போர்கள் நினைத்திட் டாலும்
சிறப்பாகக் கவியியற்றுங் கலைக்கை வந்த
திறமையினால் பெரியோனாய் திகழ்ந்த மேலோன்!
சிந்தனையில் முற்போக்கு எண்ணம் கொண்டோன்
வறுமையெனுங் கொடுமைநிறை வல்ல ரக்கன்
வயப்பட்டும்; புத்திதடு மாற்ற முற்றும்;
நிலைமதியிற் களங்கமெனக் காச நோயால்
நிலை குலைந்தும் மாய்ந்ததுயர் நெஞ்சைக் கவ்வும்!

ஞாலமிசைத் தமிழாலே ஒளியைப் பெற்று
நந்தமிழுக்(கு) ஒளிசேர்க்க இடைய றாது
கோலமிகுங் கவிதைஒளி பரப்பி வந்த
கொற்றமிகுந் ‘தமிழ்ஒளி"யாம் இளங்கு ருத்தை
கால னெனுங் கொடியதொரு கள்வன் வந்து
கவர்ந்திட்டான்! எனினும்அவன் கவிதைப் பூக்கள்
காலவெப்பிற் கருகிடாது தமிழ்த்தாய் என்னும்
கன்னியவள் சன்னதியில் கமழும் பூக்கள்!

-கவிஞர். கு.சா.கிருஷ்ணமூர்த்தி

3. தமிழ்வாழும் நாள்வாழும்

தமிழ்ஒளியே! தமிழ்ஒளியே! சாக டித்தார்
தமிழாலே உயிர்வாழும் சண்டா ளர்கள்?
உமிக்கும்நிக ராகாத பயனில் நூற்கள்
உருவாக்கும் போலிகளுக் குயிர்கொடுத்தே
குமிழைப்போல் இறக்கின்றோம் நம்மை யொத்தார்
குயில்வாழ வழியிலையா? கோட்டான் வாழ்வா?
இமயம்போல் சிறப்புடையோம் அழியா தோங்க
என்தமிழர் ஆதரித்தால் இறப்பதில்லை!
தமிழொளியே நின்ஆக்கம் ஒளிமி குந்து
தமிழ்வாழும் நாள்வாழும்! மாள்வதில்லை!

‘கவிஞன்’ (கவிதை ஏடு)