பக்கம் எண் :

141தமிழ்ஒளி கவிதைகள்

4. பொய்யாத புலமையாளன்

தமிழுக்கே எல்லாம் என்று
       தனக்கென்றே ஏதும் இன்றித்
தமிழுக்கே தன்னை ஈந்தோன்
       தன்மானச் சிகர மானோன்!
தமிழுக்கே வாழ்க்கை யென்று
       தன்வாழ்வைத் தியாகம் செய்தோன்!
தமிழுக்கே ஒளியைச் சேர்த்துத்
       “தமிழொளி” யாகப் பூத்தோன்!

‘கண்ணப்பன் கிளிகள்’ தந்த
       கண்மணிக் கவிஞன்; ஊனக்
கண்ணுமொரு கண்ணா? ஞானக்
       கண்ணன்றோ வேண்டு மென்றே
எண்ணத்தைத் தமிழில் வைத்தே
       எப்போதும் ஆய்ந்து வந்தோன்
பண்ணிழைத்த சொல்லெ டுத்தே!
       பாவினங்கள் பலவும் கண்டோன்!

கற்கண்டுத் தமிழ்மொ ழிக்குக்
       காவியங்கள் படைப்ப தற்குச்
சொற்கொண்டு சுவையும் கொண்டு
       சொக்கவைக்கும் அழகும் கொண்டு
தற்கொண்டான் தன்னைப் பேணும்
       தமிழ்மனைவி போல நாளும்
பொற்போடு தவங்கி டந்த
       பொய்யாத புலமை யாளன்!

குடும்பத்தை வைத்துக் கொண்டு
       கும்பிக்கே ஏங்கி ஏங்கி
அடுப்படிக் காக நாளும்
       ‘அல்லாடி’த் திரிந்து பாவம்
கொடுப்பாரைத் தேடித் தேடிக்
       கும்பிட்டே பாடி நிற்கும்
துடிப்பில்லாக் கவிதை வாழ்வைத்
       ‘தூ’ வென்றே உமிழ்ந்த சிங்கம்!