பக்கம் எண் :

20தமிழ்ஒளி கவிதைகள்

யாத்திரை

வெகுதூரம் நான்நடந்தேன்
        வெள்ளி முளைக்கவில்லை!
வெகுதூரம் நான்நடந்தேன்
        வீதி வெளுக்கவில்லை!

போகும்வழி நீளமென்று
        புத்தி உணர்ந்தாலும்
போகும்வழி யெனது
        போக்குக் கிசைந்தவழி!

வெள்ளி முளைவிட்டு
        வீதி வெளுத்தவுடன்
‘கள்ளி’ அவளோடு
        கைகோர்த்து நிற்பதற்கு

வெகுதூரம் நான்நடந்தேன்
        வீசுகின்ற காற்றோடு!
வெகுதூரம் நான்நடந்தேன்
        வேறுவழி காணாமல்!

போகும் வழிநெடுகப்
        பூம்பாவை தன்னுருவம்
சாகும் வரை நடந்தால்!
        சங்கமித்து ஒன்றிடலாம்

தொலைகாட்டும் கல்வரிசை
        தூரம் வெகு தூரம்!
கலைகாட்டும் நற்கவிதைக்
        கன்னி யிருக்குமிடம்!

எத்தனையோ காதலர்க்கு
        எண்ணத்தை விற்றுவிட்டாள்!
அத்தனைபேர் நெஞ்சத்தும்
        அழியாத பத்தினியாம்!