பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 21

பத்தினியின் கையணைப்பில்
        பாட்டமுதம் உண்பதற்கு
நித்திரையும் அற்றவனாய்
        நீளும் வழிநடந்தேன்!

கம்பன் நடந்துசென்று
        கைகண்ட வெற்றிவழி!
தெம்பு, திராணியற்றோர்
        தேய்ந்து மடிந்தவழி!

பாறை ஒருபுறத்தும்
        பாமாலை ஓர்புறத்தும்
சூறை ஒருபுறத்தும்
        சூழ்ந்திருக்கும் நீண்டவழி!

சூறைக்கு நேராகத்
        தோளுயர்த்தி அஞ்சாது
பாறை முதுகேறிப்
        பார்த்தவர்க்கே பாமாலை!

பாமாலை ஏந்தியவள்
        பார்த்திருக்கும் அவ்வழியும்
காமாலை கண்ணருக்குக்
        காணாமற் போனதுண்டு!

நெஞ்சம் கொடியாகி
        நேரோடித் தான்படர்ந்து,
கொஞ்சுமொழிப் பாவையொடு
        கூடும் வழியோடும்!

நெஞ்ச மலர்க்கொடிதான்
        நேராய்ப் படர்ந்தவழி
அஞ்சாது சென்றிடுவேன்
        ஆசையிலே தோல்வியில்லை!