பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 23

தமிழ்நாடு

புதுமை கண்டு வாழ இன்று
        போர் செயுந் தமிழ்நாடு - மறப்
        போர் செயுந் தமிழ்நாடு - மிக
முதுமை கொண்ட பழமை வீழ
        மோதிடும் தமிழ்நாடு - வீழ
        மோதிடும் தமிழ்நாடு!
திசையை, விண்ணை, வென்று நின்று
        சிரித்திடுந் தமிழ்நாடு - எழில்
        சிரித்திடுந் தமிழ்நாடு - கொடி
அசைய உயர மண்ணில் நிற்கும்
        கோபுரம் தமிழ்நாடு - கலைக்
        கோபுரம் தமிழ்நாடு!

காவிரிநதி பாயுங் கழனிக்
        கண்ணொளி பெறும்நாடு - முக்
        கண்ணொளி பெறும்நாடு - பொழில்
பூவிரிநறும் புனல்வி ரிந்திடும்
        பூங்கொடி தவழ்நாடு - தமிழ்ப்
        பூங்கொடி தவழ்நாடு!

கைகள் வளையின் ஒலியும் அலையும்
        கவிதை பேசும்நாடு - நற்
        கவிதை பேசும்நாடு - நம்
கைகள் தழுவிக் காதல் புரியக்
        கன்னியர் வளர்நாடு - இளங்
        கன்னியர் வளர்நாடு!

அலையும் சிலம்பின் இசையும் மலரும்
        அவிழ்ந்திடும் தமிழ்நாடு - மலர்
        அவிழ்ந்திடும் தமிழ்நாடு - பனி
மலையும் பொதிய மலையும் உறவில்
        பொங்கிய தமிழ்நாடு - மணம்
        பொங்கிய தமிழ்நாடு!