கிளியி னோடு பழகுங் காதல்
கிளிகள் பேசும் நாடு - பெண்
கிளிகள் பேசும் நாடு - புவி
வெளியில் நடனம் பயிலும் அலையின்
நாதம் பொங்கும் நாடு - கடல்
நாதம் பொங்கும் நாடு!
கம்பன் தந்த அமுத முண்டு
களித்திடுந் தமிழ்நாடு - உளங்
களித்திடுந் தமிழ்நாடு - பசுங்
கொம்பர்மீது குயில்கள் கவிதை
கொஞ்சிடுந் தமிழ்நாடு - இசை
கொஞ்சிடுந் தமிழ்நாடு!
காலம் என்ற கடலின் மீது
கப்பலோட்டும் நாடு - புகழ்க்
கப்பலோட்டும் நாடு - இந்த
ஞால மென்ற மேடை கண்ட
நாடகத் தமிழ்நாடு - ஒரு
நாடகத் தமிழ்நாடு!
உப்பு விளையும் முத்து விளையும்
உணவு விளையும் நாடு - நல்
உணவு விளையும் நாடு - ஒர்
ஒப்பி லாத உரிமை கொண்ட
உணர்வு விளையும் நாடு - தமிழ்
உணர்வு விளையும் நாடு!
‘அமுதசுரபி’ - 1951
|