பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 25

கடந்த ஆண்டுகள்

ஆற்று வெள்ளமும் ஓடி மாய்ந்தபின்
        அங்கு ஈரமும் காய்ந்த போல்
நேற்று வந்தன போலும் என்முன்
        நின்று போயின ஆண்டுகள்!

கால வாரிதி வீசி ஏகிய
        கைகளாம் திரை என்னவே
ஞால மீமிசை சென்று மாய்ந்தன
        நாளெனுந் திரை ஆகியே!

விண்ணில் சிந்திய மீன்க ளாகியும்
        மின்ன லாகியும் சென்றன
மண்ணில் தோன்றிய மானி டர்க்கொரு
        மாய மாகி மறைந்தன!

அன்னை தந்தையர் முதியர் ஆகவும்
        அன்னவர் விழி சோரவும்
என்னை வாலிபன் ஆக வீதியில்
        ஏக விட்டன ஆண்டுகள்!

மாறு தற்கொரு மாறு தல்என
        மாறி வந்தன ஆண்டுகள்!
நூறு நூறுமாய் எண்ணி லாதவாய்
        நொய் திறந்தன நாட்களும்!

விண்ணி லாதவன் சென்று சென்றுபின்
        மீண்டு வந்திட வந்திட
எண்ணி லாதன ஆண்டுகள் அவை
        எங்கு சென்றன காண்கிலேன்!