எவரெஸ்ட் பிடிபட்டது
விண்மீது மோதுகின்ற
வெற்புமுடி, ‘எவரெஸ்ட்,
பெண்ணரசி’ தேவமகள்,
பேருலகில் மானிடரைக்
கண்காட்டி ஏமாற்றிக்
கைப்பிடியிற் சிக்காமல்
மண்காட்டிக் கைலாய
வான்காட்டிக் கொக்கரித்தாள்!
எட்டிப் பிடிக்கவந்த
எத்தனையோ ஆடவரைத்
தட்டி உருட்டியவள்,
தாவிமிகக் கூவியவள்,
கட்டிப் பிடிப்போரைக்
காலனுல கேற்றியவள்,
பட்டிமகள் சிக்கிவிட்டாள்,
பாருலகே, காணாய்நீ!
மண்ணுலகில் மானிடரின்
மகிமைக்கோர் சாட்சியமாய்,
விண்ணுலகின் உச்சியிலே
வெற்றிக் கொடிபறக்கும்!
கண்ணே! பெருந்திசையே!
கார்க்கடலே! வானகமே!
மண்ணே! எவரெஸ்டை
மனிதன் பிடித்துவிட்டான்!
|