பக்கம் எண் :

30தமிழ்ஒளி கவிதைகள்

என்னுயிர்க் காதலி

சென்று மறைந்தன நாள்களும் மாதமும்
        தேய்ந்தது திங்களும் ஓர்பிறையாய்!
என்று வருவைநீ என்னுயிர்க் காதலி
        ஏங்கும் அழுகுரல் கேட்டிலையோ?

பூத்த மலர்மிசை உன்முகம் காண்பதும்
        புன்னகை காண்பதும் தாரகையில்
நாத்தழும் பேறவுன் நாமம் ஜபிப்பதும்
        நாளை யுகம் என எண்ணுவதும்

பஞ்சணை மீது தணற்புழு வாய்இப்
        பாவி துடிப்பதும் பார்க்கிலையோ?
நெஞ்சணை மீது துயிலுற என்று நீ
        நீந்தி வருவை என் கைகளிடை!

வந்தது தென்றலும் வண்ண மலரொடு
        வார்த்தைகள் பேசின வண்டுகளும்
வந்தது செங்கதிர் வையக மங்கையின்
        வாச மலரிதழ் முத்தமிட!

தாரகை மண்ணில் உதிர்வது போல்ஒரு
        தையல் முறுவல் உதிர்ப்பது போல்
ஈர மலர்கள் உதிர்ந்தன வாசலில்
        இன்னிள வேனிலும் வந்ததடி!

மோட்டுக் கிளைமிசை கூவிய மாங்குயில்
        மோகனம் நெஞ்சைக் கிறுக்குதடி!
பாட்டும் கவிதையும் தாளமும் உன்குரல்
        பண்ணொடு வந்துயிர் உண்ணுதடி!