பக்கம் எண் :

34தமிழ்ஒளி கவிதைகள்

மனக்கோயில் கொண்டெழுந்தாய்

நீண்டு வளர்ந்தபுகழ்
        நீடுற்ற பைந்தமிழைக்
கூண்டில் அடைத்திட்டுக்
        கூத்திட்ட பண்டிதரைப்
பூண்டறுத்த பாரதிக்குப்
        பொற்கோயில் கட்டியபின்
மாண்டுவிட்டாய் எங்கள்
        மனக்கோயில் கொண்டெழுந்தாய்!

தேனில் இனித்தசுவை
        தீந்தமிழை எம்நெஞ்ச
வானில் முழுமதியாய்
        வையகத்துப் பொற்சுடராய்
கூனல் உளம்நிமிர்த்தும்
        கொள்கையாய்ச் செய்தபின்
ஞானமணி நீமறைந்தாய்
        நாதம் மறைந்திடுமோ?

நற்றமிழைப் பேசஎனில்
        நாணித் தலைகுனிந்த
கற்ற குருடர்க்குக்
        கண்திறந்து வைத்ததினால்
பெற்றபுகழ் இன்றுனது
        பேராக நீமறைந்தாய்!
கொற்றவா! வெற்றிக்
        கொடிபறக்கும் உன்பேரால்!