பக்கம் எண் :

36தமிழ்ஒளி கவிதைகள்

வழிப்பயணம்

தோள்க னக்குது சுமைக னக்குது
        தொல்லை வழிப்பயணம்! - இது
        தொல்லை வழிப்பயணம்!
நாள்க னக்குது நடைக னக்குது
        நைந்த வழிப்பயணம் - இது
        நைந்த வழிப்பயணம்!

கால் கடுக்குது கை கடுக்குது
        கைத்த வழிப்பயணம் - இடர்
        தைத்த வழிப்பயணம்!
மேல் கடுக்குது வெயில் முடுக்குது
        வெற்று வழிப்பயணம் - இது
        சுற்று வழிப்பயணம்!

பள்ள மிருக்குது பாதை சறுக்குது
        பார வழிப்பயணம் - பெரும்
        பார வழிப்பயணம்!
உள்ள மிருக்குது துள்ளி நடந்திட
        ஒற்றை வழிப்பயணம் - ஒர்
        ஒற்றை வழிப்பயணம்

தேகம் நடுங்குது வேகம் ஒடுங்குது
        தேச வழிப்பயணம்! - இது
        தேச வழிப்பயணம்!
காக மிறங்குது கழுகு சுற்றுது
        காட்டு வழிப்பயணம்! - இடு
        காட்டு வழிப்பயணம்!