பக்கம் எண் :

38தமிழ்ஒளி கவிதைகள்

நிலா

பூட்டிய வீட்டைத் திறந்து குடும்பப்
புகழ்விளக் கேற்றிடவே - சுடர்
தீட்டப் புகுந்த புதுமணப் பெண்எனத்
தென்படும் வட்டநிலா - கண்
முன்படும் வட்டநிலா!

தன்னந் தனிமையில் பெண்வரும் சாயலில்
தத்தும் நடைநடந்தே - இரு
கன்னங் கனிந்திடக் காதல் பிறந்திடக்
காணுது வட்டநிலா - சற்று
நாணுது வட்டநிலா!

‘ஓங்கு முகில்ரதம் ஏறி வருகின்ற
ஊர்வசி யேவருக!’ - என
வேய்ங்குழல் கொண்டு வருகின்ற காதலை
வேண்டுது வட்டநிலா - மலை
தாண்டுது வட்டநிலா!

‘சரஸ்வதி’ - 1954
‘கலாவல்லி’ - 1955

‘கலைமகள்’ -1958