கிரகணம்
ஒருசுடரை ஒருகை
மறைத்ததென விண்ணில்
வருசுடரை வந்து
மறைக்கவரும் திங்கள்!
‘குடுகு’டென ஓடும்
குகைப்புலியை இன்று
‘விடுவி’டென வந்து
விழுங்கும்விட நாகம்!
வெடிக்கமுகில் ஓடும்
வேகமிகு தேரைப்
பிடிக்கவரும்,வந்து
பிழைக்கவரும் திங்கள்!
ஒருசிறு வெண்மலரில்
ஒருகரு வண்டுமது
பருகிட வந்தமரும்
படமென வரும்நிழலே!
(வேறு)
ஆடும் ஊர்வசி யாகவிண்ணிடை
ஆடுகின்ற நிலா மகள்!
மூடு கார்இரு ளூடுசெந்தழல்
மூடுகின்ற கலாமகள்!
(வேறு)
பகல்என்ற திரைகொண்டு
வந்தாள், அவள்முகம்
பார்த்திடக் கூடவில்லை!
நகலென்ற நிழலாக
நின்றாள், அணைந்தாள்!
நடந்த கதிர்ச்செல்வனை!
|