தாஜ்மகால்
சொல்லும் யமுனை
நதியின் கரையில்
செல்லும் யாத்ரிகனே!
நில்லும் நெடுநாள்
கேட்க நினைத்தேன்
நேரம் கிட்டியதே!
காதல் மகுடம்
கண்முன் பாராய்
கம்பன் கவிபோலே!
சாதல் இன்றே
திகழும் தீபம்
தாஜ்மகால் பாராய்!
(வேறு)
கல்லால் சமைந்ததோ,
மண்ணால் சமைந்ததோ?
கார்முகில் தங்குகின்ற
வில்லால் சமைந்ததோ,
விண்ணால் சமைந்ததோ,
வெற்பினால் சமைந்தஒன்றோ?
சொல்லால் சமைந்ததோ,
சுடரால் சமைந்ததோ?
சொல்க நீ என்று கேட்க,
அல்லால் மறைந்திடா
தாஜ்மகால் நோக்கியே
அன்பினால் பேசலுற்றான்;
|