(வேறு)
கல்லால் மலரால்
வெயிலால் தழலால்
கட்டிய தல்லஇது!
வில்லால் இரவில்
வீசும் நிலவால்
மேவிய தல்லஇது!
சொல்லால் ஏதும்
சொல்ல வொணாத
சோதியின் சாரமிது!
எல்லா உலகும்
புகழும் மும்தாஜ்
ஏற்றிய தீபமிது!
பொன்னால் மணியால்
மின்னார் அணியால்
பூட்டிய தல்லஇது!
என்னால் சொல்லும்
தரமோ விண்மீன்
இன்னொளி அல்லஇது!
தென்னந்திசையின்
மன்னா சொல்வேன்,
தெய்விகமாம் பெண்மை!
தன்னால் இதயத்
தழலால் ஒளியால்
சமைந்த கோயில்இது!
-1955
உதவியவர் : ஏ.எல்.நாராயணன்
குறிப்பு : முற்றுப் பெறாத கதைப் பாடல்
|