மாசற்ற தியாகம்
போற்றுவார் உன்னைப் புரட்சிமலர்த் தோட்டமென,
ஏற்றுவார் உன்னை இமவானின் உச்சியிலே!
சாற்றுவார் கீர்த்தனங்கள், தட்டுவார் மேளங்கள்!
ஆற்றல் உடையவர்கள் ஆதித்திரா விடராம்
காற்றைப் போல் வீசுவராம் காட்டைத் திருத்துவராம்
சோற்றைச் சமைப்பவராம் தூயசகோ தரராம்
என்றென்று பாராட்டி எத்தனைபேர் ஏப்பமிட்டார்!
ஒன்றொன்றாய்ப் பேசியவர் உன்மடியில் கைவைத்தார்!
உண்டி யெடுத்தார்கள் ஊரூராய்ச் சென்றார்கள்
‘கண்டீரோ ஏழை கதறுகிறான்’ என்றார்கள்
நிதிதிரட்டிக் கொண்டு நெடுநாளாய்ச் சேகரித்தார்
விதிமாறவில்லை இன்னும் வேதனையும் தீரவில்லை!
சாப்பிட்ட பேர்களுக்கு சந்தானம் ஏறிற்று!
ஏப்பமிட்ட பேர்களுக்கு எத்தனையோ சம்பத்து!
மேடையிலே அன்னார் மிடுக்கான சொற்பொழிவு
பாடல், பஜனை, பதவி திருக்கோலம்!
அரிஜனத் தொண்டர் என்று ஆகாச வாணவெடி!
சரிகைத் துணிகள் சரம்சரமாய்ப் பொற்காசு!
உன்பேர் உரைத்தே உயர்ந்தார் ஒருசிலபேர்!
துன்பக் கொடுஞ்சேற்றில் தூர்ந்தாய் துயருற்றாய்!
அன்றிருந்த மேனி அழியா திருக்கின்றாய்!
தொன்று தொட்டு வந்தசுமை தூக்கி மடிகின்றாய்!
மண்ணில் மடிகின்ற மாசற்ற தியாகத்தை
எண்ண, எழுத எவருள்ளார் இந்நாட்டில்?
‘மனிதன்’ - 1955
|