வாடா மலர்
விண்ணி லிருந்து பிறந்த அமுதம்
விழுந்தது வித்துக்களாய் - அவை
மண்ணில் முளைத்தன வண்ணச் செடிமலர்
என்னப் புகழுடனே!
அம்மலர் மாலை தொடுத்துநம் அன்னை
அணிந்திடச் செய்தவனாம் - அவன்
நம்மைப் பிரிந்தும் உயிர்த்த கவிமணி
நாஞ்சிற் பெரும்புலவன்!
எண்ணங்கள் என்ற பறவைகள் பாடும்
இசையில் எழுந்தஇசை - அதை
உண்ணப் பறந்துநம் உள்ளம் உலாவ
உயர்ந்த தமிழ்க்கவிதை!
கற்பனை யென்ற மழைவர உள்ளம்
களித்து நடமாட - ‘இது
அற்புதம், அற்புதம்!’ என்றிடும் செஞ்சொல்
அளித்த தமிழ்ப்புலவன்!
மூத்து நரைதிரை வந்திட ஆயுள்
முடிந்தது நாமறிவோம் - எனில்
கோத்து நமக்குக் கொடுத்திட்ட மாலையின்
கோலம் அழிந்திடுமோ?
வஞ்சகக் காலன் வருவதும் போவதும்
வாழ்க்கை நியதியடா! - எனில்
செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று
சிரிப்ப தியற்கையடா!
-1955
‘கவிமணி தேசிக விநாயகம் நினைவு மலர்’
|