பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 51

பாரதி பரம்பரை

சீறி அடித்துச் சுழன்ற அலைகளில்
        சிக்கிய ஓர் படகாய் - தடு
மாறி இளைத்து மடிந்த மகாகவி
        தன்சரிதம் உரைப்பேன்!

கண்வழி சொட்டுங் குருதி யொடுங்
        கானில் வழிதடவி - தமிழ்ப்
பண்வழி சென்று பழம்புகழ் சேர்த்தவன்
        பாரதி என்பவனாம்!

கொத்தும் வறுமைக் கழுகு பறந்திடக்
        கூகை அலறிவிழப் - பணப்
பித்தர் திரியக் கிடந்த இருளைப்
        பிளந்து பிளந்தெறிந்தான்!

கானில் நடந்து நடந்து பெரும்புயற்
        காற்றில் ஒருசுடராய் - தனி
மீனென நின்று நிலைத்தது சோக
        மிகுந்த கதையலவோ?

காலக் கடலலை கொட்டிய பாடலிற்
        காற்றெனும் யாழ்நரம்பில் - பெரு
ஞாலத் திசைகளில் தத்தி நடந்திடும்
        நாரத கானம்எது?

பட்டப் பகல்வரும் சூரிய னாகிப்
        படும்இருள் வந்தவுடன் - ஒரு
வட்ட மதியென வந்து கவிஞரை
        வாழ்த்தும் கவிதைஎது?

ஆண்டுகள் சென்று மடிய அவற்றை
        அழித்துப் புதுநெறியாய்ப் - புவி
மீண்டும் பெறச்சுடர் மின்னல் எடுத்து
        மிடைந்த கவிதைஎது?