பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 5

குயில்

குன்றி விழியினில் கோலம் ஏந்தித்
தென்றிசைத் தமிழும் குழலும் யாழும்
சேர்ந்திசைத் தாலெனச் சின்னவாய் திறந்து
ஆர்த்திசைக் கின்றாய் அழகிய குயிலே!

கருப்பிலே அழகு! கண்கவர் கண்கள்!
நறுங்கனி நாவல் விருந்திலே நாட்டம்!
வான நீலத்தில் வாய்ந்ததோர் துளியில்
ஆன மூக்கிலே அற்புத வண்ணம்!

உண்ணும் நாவற் கனிபோல் உன்னுடல்
வண்ணம் வாய்ந்தது! வான்கிளை மீதில்
தொத்தியும் சிறகினைத் தூக்கித் தாவியும்
தித்திப் பாகச் செழுந்தமிழ்ப் பாடித்

தோட்ட மெல்லாம் சுற்றுவாய் விடுதலைப்
பாட்டிலே மண்ணை மயக்குவாய்! பச்சைக்
காட்டிலே உலவும் கவிதையின் குழல் நீ!
ஏட்டிலே காணா இசையின் வெள்ளம் நீ!

உன்குரல் பெண்ணின் குரலுக் கொப்பெனப்
பன்னுவர் கவிஞர், பாதிதான் உண்மை!
பெண்களின் குரலிலே பிணியும் ஏக்கமும்
பண்ணிலாச் சோகமும் பயமும் அடிமையும்

நிறைந்தன ஆதலால் நேரிசைக் குரலிலே
கறையே அமைந்தது! கவின்குயிலே, உன்
விடுதலைக் குரலிலே வெற்றிஎக் காளம்!
நடுங்கும் பெண்களின் நற்குரல் தன்னிலே

விடுதலை யிசையும் வீரமும் இல்லையே!
கெடுதலை செய்தனர் ஆணினக் கிறுக்கர்!
கூவுவாய் குயிலே ‘குவலயத் தினி மேல்
மேவும் சமநிலை மேவிடும்’ என்றே!

‘குயில்’ - 1947