இயற்கை
அன்னையின் கோபம்
கொட்டிடி கொட்டி
எழுந்தாள் - அன்னை
கோபத்தி லேமின்னல்! தீயை யுமிழ்ந்தாள்!
கட்டிக் கிடந்திடும் மேகம் - எனும்
கார்மலை யாம்குடம் எற்றிப் புரட்டிக்
கொட்டினள் காலவெள் ளத்தை - அவள்
கொக்கரித் தாள்திசை எட்டும் நடுங்க
தட்டி யெழுப்பினள் காற்றை - அது
தாவி யுருட்டுது மாமரக் காட்டை!
கட்டறுத் தோம்என வீழும் - மரம்
கால்கள் புரண்டு தலைதடு மாறும்!
மட்டைக் கிளைமுறிந் தோடும் - இலை
வாரி யடித்துமண் மேட்டினை மூடும்!
ஒட்டுச் சுவர்விழும் காட்சி-தென்னை
ஒவ்வொன்றும் மண்ணிடை யுற்றிடும் வீழ்ச்சி!
மட்டற்றுப் போயிற்று நாசம் - இந்த
மண்ணிடை யேசூறை கொண்டது வாசம்!
ஆல்எனும் மத்த கஜத்தை - மிகும்
ஆத்திரத் தோடொரு சிங்கத்தைப் போலே
வேல்எனப் பாய்ந்து கிழிக்கும் - தரை
மேற்சிறு புற்களைக் கிள்ளி எடுக்கும்!
கால்எடுத் தூன்றினள் அன்னை - அங்குக்
காண்இடி, மின்னல், அதிர்ந்திடும் அண்டம்!
மால்வரை பேர்த்திடும் சப்தம் - ‘மட
மட்’கென வீறிட்டுக் கத்திடும் யுத்தம்!
|