பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 53

பொங்கல்

ஆழி எழுங்கதிரைப் - பல்
லூழி அலைக்குதிரை
வாழி எனமுது கேற்றி மகிழ்ந்திட
வந்திடும் தைப்பொங்கல் - சுடர்
தந்திடும் தைப்பொங்கல்!

ஓடி வருந்திரையைப் - பனி
மூடி வருந்திரையைச்
சாடி எழுந்திடக் கோடி சுடர்க்கொடி
தந்திடும் தைப்பொங்கல் -கதிர்
வந்திடும் தைப்பொங்கல்! 

தெற்கில் எழுங்கதிரை - எதிர்த்
திக்கில் செலுத்திடவே
பொற்கல சம்நிறை நெற்குவி யல்தரப்
பொங்கிடும் தைப்பொங்கல் - பால்
பொங்கிடும் தைப்பொங்கல்!

காடு, கரை, தரையைத் - தமிழ்
சூடும் வடவரையைப்
பாடுந் தமிழ்க்கவி ஏடு சிறந்திடப்
பண்ணுந் தமிழ்ப்பொங்கல் - அமு
துண்ணும் தமிழ்ப்பொங்கல்!

(வேறு)

பட்டுக் கதிருடை
கட்டுங் கழனிகள்
பாடிய பொங்கலிதோ - மகிழ்ந்
தாடிய பொங்கலிதோ!

சொட்டும் பனிக்குளிர்
விட்டுப் பறந்திடத்
தொட்டிடும் பொங்கலிதோ - சுடர்ப்
பொட்டிடும் பொங்கலிதோ!

‘கலாவல்லி’ - 1956