பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 54

தென்மகள் வருகின்றாள்!

    பூவிரி சோலைகள் யாவும் வணங்கப்
        பொன்மலர் தான்சிந்தக்
    காவிரி அன்னை வருகின்றாள் பொற்
        கழல் ‘கல கல’ வென்றே!

    சேயெனும் நன்செய்ப் பயிர்கள் அழைக்க
        சேலெனும் விழிமகிழத்
    தாயெனும் காவிரி வருகின்றாள் அலை
        ‘சலசல சல’ வென்றே!

    பூந்துகில் சுற்றிப் பொற்கரை யிட்டுப்
        புன்னகை தான்சிந்தித்
    தீந்தமிழ் பாடித் திரையொடும் ஆடித்
        தென்மகள் வருகின்றாள்!

    செந்தமிழ் வாணர் சிந்தை களிக்கத்
        தெண்டிரை பரிசேந்தி
    வந்தனள் அன்னை செந்தமிழ் நாடு
        வளம் ‘வளர் வளர்’ கென்றே!

‘சோஷலிஸ்ட்’ - 1956