பக்கம் எண் :

55தமிழ்ஒளி கவிதைகள்

எண்ணம்

மேக ரதத்தினில்
        ஏறிடவும் ஒரு
        மின்னலென உரு
        மாறிடவும்,

சோகக் குமுறல்
        இடித்திடவும் விழி
        சொட்டுங்க(ண்) ணீர்மழை
        விட்டிடவும்,

காட்டு மலரெனப்
        பூத்திடவும் வருங்
        காற்றினில் ஆனந்தக்
        கூத்திடவும்,

பாட்டு மயக்கினில்
        ஆழ்ந்திடவும் எழிற்
        பாவை முயக்கினில்
        வீழ்ந்திடவும்,

வானக் கருக்கலில்
        நீந்திடவும் முகில்
        வர்ணக் கலப்பினிற்
        சேர்ந்திடவும்,

ஈனக் கவலையை
        எற்றிடவும் மனம்
        எண்ணிப் பெருந்தொலை
        சுற்றிடுதே!

‘அமுதசுரபி’ - 1956