வேண்டும் வரம்
மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம்!
ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும்!
ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம்!
கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம்ஜயம்’ என்றாடும்!
‘கலைமகள்’ -1956
|