நாளை எனும் நாள்
நேற்று வாழ்ந்த வாழ்வெல்லாம்
நினைவைக் கொல்லும் சோதனையாம்
காற்றில் கதறும் துன்பஒலி
கனலுங் கனலாய் இன்றைக்கு!
நேற்றும் இன்றும் வெறுப்புற்றேன்
நீயேன் இன்னும் ஒளிகின்றாய்?
மாற்று மருந்து தரவல்லாய்!
மலரும் நாளே வாராய்நீ!
சுற்றம் என்போர் கைதிகளாம்!
சொத்தும் சுகமும் கற்பனையாம்!
வற்றும் குளத்து மீனாக
வாழ்நாள் எய்துந் துயர்போகக்
கற்றோர் நெஞ்சக் களிப்பேபோல்
கம்பன் செய்த கவியேபோல்
நற்றேன் ஒழுக மலர்விரியும்
நாளே வாராய், வாராய்நீ!
‘சுதந்திரம்’ - 1956
|