பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 58

வசந்த மனோகரி

மாமரக் கொம்புகள்
        தோரணங் கொண்டு
        மலர்கள் அசைந்தாடக்,
காமனைச் சென்று
        கருங்குயிற் கன்னி
        கலந்த இசைபாடப்
பூமகள் புன்னகை
        கொண்டு மலர்கள்,
        புனைந்து புனைந்தாடக்
கோமள வல்லி
        வசந்த மனோகரி
        கொஞ்சிட வந்தாளே!

வில்லொடு மன்மதன்
        வீதியில் வந்து
        மலர்ச்சரம் விட்டோட,
‘கொல்’லென வஞ்சியர்
        சிந்தும் சிரிப்பொலி
        கூற்றம் எனச்சாட,
‘நில்’லென ஆடவர்
        நெஞ்சினைக் கவ்வ
        நினைவு கழன்றோடப்
புல்லிட வந்த
        வசந்த மனோகரி
        போதை கொடுத்தாளே!