பக்கம் எண் :

61தமிழ்ஒளி கவிதைகள்

ரோஜா மகள்

முள்எனும் வாள்எடுத்துப் - புது
        மோகச் சுடர்தொடுத்துக்
கள்ளிதழ் தான்துடிக்க - ஒரு
        கன்னிகை நின்றிருந்தாள்!

உதயச் சுடர்எனவே - அவள்
        உடலிற் புதுப்பொலிவு
இதயங் குளிர்ந்திடவே - நான்
        எட்டிப் பிடிக்கச் சென்றேன்!

வாள்முளை முள்ளெதிர்க்கும் - அவள்
        வாசம் எனைஇழுக்கும்!
தோள்இருக் கும்வரையில் - ஒரு
        தோல்வி வருவதுண்டோ?

எட்டிப் பிடித்துவிட்டேன் - அவள்
        என்னை வெறுக்கவில்லை!
கட்டிய வாள்முனைமுள் - என்
        கைகளிற் குத்தியது!

மங்கையைக் காத்ததும்நான் - அவள்
        மானத்தைக் காத்ததும்நான்!
தங்கையை விட்டுவிடும்” - எனத்
        தத்துவம் பேசிற்றுமுள்!

பெற்றவர் காத்திடுவார் - பெண்ணைப்
        பேணி வளர்த்திடுவார்
உற்றிடும் காதலனே - அவள்
        உள்ளங் கவர்ந்திடுவான்!