தாமரைப் பெண்
தாமரை :
மூடிய போர்வை அகற்றியென் மேனியில்
முத்தங் கொடுத்தவன் யார்? - மனப்
பித்தங் கொடுத்தவன் யார்? - இமை
மூடிய கண்கள் விழிக்க எனக்கொரு
மோகங் கொடுத்தவன் யார்? - புதுத்
தாகங் கொடுத்தவன் யார்?
கதிரவன் :
மொட்டென் றிருந்தவுன் மேனியிற் காலையில்
முத்தங் கொடுத்தவன் நான் - மனப்
பித்தங் கொடுத்தவன் நான்! - ஒரு
பொட்டென் றிருந்தவுன் மேனி மணம்பெறப்
பூத்திடச் செய்தவன் நான் - கலைக்
கூத்திடச் செய்தவன் நான்!
தாமரை :
தெண்டிரை நீக்கியென் சோதி வெளிப்படச்
செய்த திருமகன் யார்? - நலம்
பெய்த பெருமகன் யார்? - இன
வண்டிரைத் தேர்ந்திடுந் தேனித ழில்மண
வாழ்த்துக் கொடுத்தவன் யார்? - மடம்
வீழ்த்தக் கெடுத்தவன் யார்?
கதிரவன் :
தண்ணென் றிருந்த குளிரில் முகத்திரை
தன்னை எடுத்தவன் நான் - சுடர்
மின்ன விடுத்தவன் நான்! - சிறு
பெண்ணென் றிருந்தவுன் மேனியில் வாலிபம்
பேசி முடித்தவன் நான் - வலை
வீசிப் பிடித்தவன் நான்!
‘கலைமகள்’ - 1957
|