தீப்பொறிகள்
பிறந்த நாள் பெருமை!
ஏது பிறந்தநாள்? ஏதோ இறந்தநாள்!
ஏதேதோ மண்ணில் இருந்தநாள் - ஓதுவீர்!
எல்லாம் ஒருநாள்! இதற்கேன் திருநாள்!
கல்லாத மூடர் களே!
எண்ணிப் பிறந்தவர் எவர்?
‘யார் பிறந்தார்? யார் இறந்தார்? யார் இருந்தார்? என்பீரேல்,
‘ஊர் பிறந்தார் இன்பம்உறப்பிறந்தார் - போர்பிறந்த
மண்ணிற் பிறந்தார்! மடியப் பிறந்தார்!
எண்ணிப் பிறந்தவர் இல்!’
உண்மைதனைக் கொன்று....
மண்மேல் இருப்பார்க்கு மண்ணிற் குழிபறிப்பீர்!
விண்மேல் இருப்பார்க்கு வேட்டுவைப்பீர் - உண்மைதனைக்
கொன்று புதைத்துக் கொடிகட்டிக் கும்பிடுவீர்!
என்றும் உமக்கே விழா!
உண்டாடும் உண்மை உயிர்
நேற்று மடிந்தார் நினைவுவிழா எடுப்பீர்
ஏற்று மடிந்தார் எவர் வருவார்? - சோற்றுக்குத்
திண்டாடும் தொண்டர் திருநாள் செயவாரீர்!
உண்டாடும் உண்மை யுயிர்!
நடமாடும் தெய்வம்!
ஒத்தூத ஊத உடுக்கை அடிக்க
அத்தூத வேண்டும் அவசரமாய்! - சித்தாடும்
தெய்வத்திற்கல்ல, தெருவில் நடமாடும்
தெய்வத்திற் கேதிரு விழா!
|