வள்ளைப் பாட்டு
‘தந்த தனத்தனம்’
என்று குற்றுங்களே!
தண்டமிழ்ப் பொங்கல்விழா! - சென்று
தட்டுங்கள் ஞானமுழா! - கதிர்
வந்த வழிதொறும்
வாங்கி உலக்கையை
வாழ்த்திநெற் குற்றுங்களே - முடி
தாழ்த்திநெற் குற்றுங்களே!
கொண்டை குலுங்கிடக்
குற்றுங்கள் நெல்மணி
கொஞ்சிடும் பொங்கல்விழா! - சென்று
கொட்டுங்கள் ஞானமுழா! - விழி
கெண்டை குதித்துக்
கிடக்குது பாற்குடக்
கேணியிற் பாருங்களே! - அது
கேட்டது தாருங்களே!
ஓச்சுந் தொறும்வளை
பேச்சுக் கொடுத்திட
ஓங்கிநெற் குற்றுங்களே! - இடை
ஏங்கிநெற் குற்றுங்களே! - பொழு
தாச்சு! விழுந்திருள்
போர்த்த வருகுது
பார்த்துநெற் குற்றுங்களே! - கை
சேர்த்துநெற் குற்றுங்களே!
செய்யில் முளைத்தது
நெய்யில் குளித்திடும்
தித்திக்கக் குற்றுங்களே! - பலன்
சிந்திக்கக் குற்றுங்களே! - இரு
கையில் நடஞ்செயக்
கற்ற உலக்கையிற்
காட்டுநெற் குற்றுங்களே! - தமிழ்
நாட்டுநெற் குற்றுங்களே!
‘சுதேசமித்திரன்’ - 1958
|