வாழி இளவேனில்!
கொழுந்தளிரை மாவீன்று
கோலம் புனைந்த
தொழுந்தகைமை காண்டி
இளவேனில்!
தொழுந்தகைமை கண்டு
சுடர்கொள்ள இங்கே
எழுந்தருளு கின்றாய்!
வாழி இளவேனில்!
புல்லாடை போர்த்துப்
பொலிந்த தரைநங்கை
சொல்லாடற் காண்டி
இளவேனில்!
சொல்லாடற் கண்டு
சுழல்கின்ற ஞாயிற்றின்
எல்லாடற் செய்தியால்!
வாழி இளவேனில்!
தோட்டக் குளிர்மாடந்
தொத்தும் குயிற்பெண்கள்
ஈட்டமாய்க் காண்டி
இளவேனில்!
ஈட்டம் எதிர
எழுந்த அரசேபோல்
வாட்டந் துடைத்தியால்!
வாழி இளவேனில்!
செந்தா மரைப்பெண்டிற்
தேன்சுரும்பர் என்கின்ற
பந்தாடற் காண்டி
இளவேனில்!
பந்தாடக் கண்ட
பரவசத்திற் காதலன்போல்
வந்தாடற் செய்தியால்!
வாழி இளவேனில்!
‘கலைமகள்’ - 1958
|