கண்ணம்மா
மஞ்சள் கரைத்து விட்டாள் - கண்ணம்மா
மாணிக்க ஓடையிலே!
நெஞ்சங் கரைந்து விட்டேன் மஞ்சளாய்
நீந்திநீ ராடுகிறேன்!
மூழ்கிக் குளித்து விட்டாள் - கண்ணம்மா
முத்துநீர் ஓடையிலே!
தாழ்குழ லில்மல ராய் - அடியேன்
தாவிட நீந்துகிறேன்!
நீரைக் கலக்கி விட்டாள் - கண்ணம்மா
நித்தில ஓடையிலே!
பேரைக் கலக்கி விட்டாள் - அலைகளில்
பேசிநீ ராடுகிறேன்!
சேலை பிழிந்து விட்டாள் - கண்ணம்மா
சித்திர ஓடையிலே!
ஆலை பிழிகரும் பாய் - என்னுளம்
ஆடநீ ராடுகிறேன்!
உள்ளம் எழுதிவிட்டாள் - கண்ணம்மா
ஊற்றுநீ ரோடையிலே!
கள்ளம் அழிந்து விட்டேன் - அடியேன்
காதல்நீ ராடுகிறேன்!
‘சுதேசமித்திரன்’ - 1958
|