சேரன் கூத்து
வில்லெடுத்து நின்றவொரு மறவன் - பசும்
புல்லெடுத்து நின்றமலைக் குறவன் - தமிழ்ச்
சொல்லெடுத்த இசைகொண்டு
*துணங்கைக்கூத் தினிற்பண்டு
மகிழ்ந்தான் - உளம் - நெகிழ்ந்தான்!
வெற்பெடுத்து நின்றஇரு தோளான் - பகை
வேங்கையைப் பிளந்தசுடர் வாளான் - மறக்
கற்பெடுத்த கண்ணகிக்குக்
கட்டிய கோயிலுடைய
வீரன் - பழஞ் - சேரன்!
நுங்கெடுத்து நின்றபனம் பூவான் - பகை
நூறிட அதட்டுகின்ற நாவான் - தமிழ்ச்
சங்கெடுத்தெங் கும்முழக்கிச்
சாகரம்எல் லாம்உழக்குந்
தச்சன் - மலை - அச்சன்!
சிந்தெடுத்த சந்தம்ஒன்று பாடி - அவன்
செய்தெடுத்த தென்னவொரு மோடி! - மலர்ப்
பந்தெடுத் தடிக்கும் பெண்டிர்
பாய்ந்தெடுத் தணைக்குங்கையைத்
தந்தான் - சுற்றி - வந்தான்!
‘தந்தனம் தனத்தந்தன தானா’ - என்று
தாண்டித் தாண்டிஆடி னானா? - அவன்
முந்தவும்பிந் தவும்பெண்டிர்
மொய்க்கவும் தைக்கவும்சுற்றி
வந்தான் - சுவை - தந்தான்!
‘கலைமகள்’ - 1958
*துணங்கைக் கூத்து ஆடும் பெண்டிர்க்குக் கைகொடுத்தல் அரசர் மரபு
|