பக்கம் எண் :

71தமிழ்ஒளி கவிதைகள்

எண்ணித் துணிந்தேன்

விண்ணைத் தொடமுயன்றேன் - போர்
        வித்தை கற்கமுயன்றேன்!
மண்ணைத் தொடும்நிழலில் - மன
        மங்கை எனைத்தடுத்தாள்!

திங்களை எட்டச்சென்றேன் - மேற்
        சென்றுகை கொட்டச்சென்றேன்!
மங்கை மனக்கிழத்தி - எனை
        மண்ணில் இறக்கிவிட்டாள்!

ஆகாயம் நீந்தச்சென்றேன் - கோள்
        ஆயிரம் ஏந்தச்சென்றேன்!
சாகா மனக்கிழத்தி - எனைத்
        தரையில் இறக்கிவிட்டாள்!

புதனைப் பிணிக்கச்சென்றேன் - செவ்வாய்ப்
        புத்தி கணிக்கச்சென்றேன்!
பதறி நெடுந்தரையில் - மனப்
        பாவை இறக்கிவிட்டாள்!

மண்ணில் முளைத்தவன்நான் - அதன்
        மார்பில் திளைத்தவன்நான்!
எண்ணித் துணிந்துவிட்டேன் - இனி
        எங்கும் பறந்தசெல்லேன்!

‘கலைமகள்’ - 1958