பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 72

தமிழ்க் கன்னி

கால்நடையால் ஓரூர்க்கு
        நான்சென்றேன், அங்குக்
        கடைச்சங்க காலத்துத்
        தமிழ்ச்சுவடி ஒன்று
பால்அடைபோல் இருந்ததனைப்
        பார்த்துவந்தேன் என்ற
        *பழையவரின் சொல்நம்பிப்
        பாய்ந்துநான் சென்றேன்!

சேல்இருந்த குளம்தாண்டி
        வயல்தாண்டி கற்கள்
        சிலதாண்டி அவ்வூரைச்
        சென்றடைந்தேன் அம்மா!
ஆல்ஒன்று முன்னின்றே
        அமர்கஎன நீழல்
        அளித்தென்னை எதிரேற்க
        அமர்ந்திருந்தேன் சற்று!

வெயில்ஒழுகும் பகலதனால்
        வேர்வைமெய் யொழுக
        விழுதொழுகும் ஆலின்கீழ்
        விரிந்தநிழல் மெழுகத்
துயிலொழுகக் கண்களிலே
        களைப்பினாற் சாய்ந்தேன்!
        துடைத்ததுகாண் சிரமத்தைத்
        துளிர்ஒழுகுந் தென்றல்!

*முதியவர்