குயிலொழுகும் இசைபரவக்
கிள்ளைகளும் கொஞ்சக்
கோடைநாள் மண்டபத்திற்
குடிகொண்டேன் துயில!
எயிலொழுகும் நகர்கண்டும்
எதிரரண்கள் கண்டும்
*இருந்ததமிழ் இருந்தஇடம்
ஏழையர்தம் இல்லம்!
கண்விழித்தேன் துயிலெழுந்து!
கற்பனையோ! ஊரிற்
கனல்எழுந்து சீறிற்றுப்
பலர்கதறக் கேட்டேன்!
விண்விழித்த சீற்றம்போல்
வெந்நெருப்பிற் பட்டு
வெடிக்கின்ற தொருகுழலின்
வேய்பிளந்த வாய்போல்!
பண்கொழிக்கும் பழஞ்சுவடி
பதம்பார்க்க வந்தேன்!
படைகொழிக்குங் கனல்கண்டு
மனம்பதறிப் போனேன்!
எண்கொழிக்கும் சோகங்கள்
எங்கெங்கோ வைகி
இருந்துபுகை கக்கினகாண்!
என்முகத்தை நோக்கி!
செக்கர்எனத் தெரிகின்ற
திசைநோக்கி ஓடித்
தீயணைக்கக் குழுமியோர்
செய்கைதனைக் கண்டேன்!
பக்கமெலாம் புடைசூழப்
பலர்இருந்து கத்தப்
பதைபதைக்கும் இருவர்களுள்
ஒருபெண்ணைக் கண்டேன்!
* ஈண்டு ஓலைச்சுவடி இருந்த இடத்தைக் குறித்தது.
|