துக்கமெலாம் அவள்முகத்திற்
சூழ்ந்ததுகாண்! நெஞ்சந்
துடித்ததுகாண்! வெடித்ததுகாண்!
இணைவிழிகள் சிந்தும்
மிக்கநீர் அருவியோ!
அலைகடலோ அம்மா!
வீழ்ந்தழுத கிழவன்றான்
தாதைஎனக் கண்டேன்!
(வேறு)
சென்றேன் அங்குறும்
நிலை கண்டேன்!
தீயின் முன்னொரு
சிலை கண்டேன்
நின்றேன் கண்களில்
நீர் வார!
நெஞ்சிற் கனலின்
நெடி யேற!
(வேறு)
‘என்னுலகம் போயிற்றே!’ என்றழுத கிழவர்,
எனைநோக்கி, இடர்நோக்கி, ‘நான் வைத்துக் காத்த
பொன்னுலகம் போயிற்றே’ என்றழுதார், அந்தப்
புதிர்உலகம் ‘என்?’னென்று நான்கேட்கு முன்னந்
தன்னுலகம். ‘தமிழ்உலகம். தவஉலகம்’ என்றார்!
‘சங்கத்துத் தமிழ்ச்சுவடி தான்’ என்று சொன்னார்!
‘மன்னுலகம் பொறாமைக்கு மண்டியிடும் உலகம்
மடுத்ததுகாண் சிறுகுடிலிற் பெருநெருப்பை!’ என்றார்!
|